மாவட்ட செய்திகள்

ஜெகதாபியில் 1,500 மாணவர்களை சேர்த்து அசத்திய அரசு மாதிரி பள்ளி + "||" + Government High School

ஜெகதாபியில் 1,500 மாணவர்களை சேர்த்து அசத்திய அரசு மாதிரி பள்ளி

ஜெகதாபியில் 1,500 மாணவர்களை சேர்த்து அசத்திய அரசு மாதிரி பள்ளி
ஜெகதாபியில் 1,500 மாணவர்களை சேர்த்து அசத்திய அரசு மாதிரி பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளியணை
 அரசு மேல்நிலைப்பள்ளி
கரூா் மாவட்டம் ஜெகதாபியில் அரசு நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த அரசு பள்ளி கடந்த 2002-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டு மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தபோது சுமார் 150-க்கும் குறைவான மாணவர்களே இப்பள்ளியில் கல்வி பயின்று வந்தனர். இந் நிலையில் 2014-ம் ஆண்டு இப்பள்ளியின் தலைமை ஆசிாியராக  பொறுப்பேற்ற தற்போதைய தலைமை ஆசிாியர்  தீனதயாளன் மாணவர் சோ்க்கையை அதிகரித்து, இந்த பள்ளியை மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக மாற்றவேண்டும் என கனவுடன் தனது பணியினை தொடங்கினாா். 
தேர்ச்சி சதவீதம்
இதற்காக அனைத்து ஆசிாியர்களையும் அழைத்து ஆலோசனை மேற்கொண்டாா். அதன்படி தலைமை ஆசிாியருடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்த அனைத்து ஆசிாியர்களும் தொடங்கினர். மாணவர்களுக்கு சிறப்பு கவனத்துடன் பாடங்களை கற்றுக்கொடுத்த ஆசிாியர்களால் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுத்தோ்வுகளில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் அதிக  எண்ணிக்கையில் தோ்ச்சி சதவீதத்தை அடைந்தனர். பள்ளியின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தினால்தான் சிறந்த பள்ளியாக மாறும் எனக்கருதி வெட்டவெளி மைதானத்துடன், ஒரே கட்டிடத்தில் செயல்பட்ட பள்ளிக்கு சுற்றுசுவரும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் வேண்டி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அவையும் நிறைவேற்றப்பட்டது.         
பெற்றோர்கள் கவனம்
இதனால் பள்ளியின் அமைப்பு மாறி மாணவர்கள்  பாதுகாப்பான சூழ்நிலையில் வசதியாக கல்வி கற்கும் நிலை உருவானது. மேலும் அரசின் நிதியுதவியுடன் குடிநீா் வசதி கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டது. இப்படி பள்ளியின் வளர்ச்சிக்காக தனி கவனத்துடன் செய்யப்படும் பல்வேறு செயல்பாடுகளும், மாணவர்களின்  நல்ல தேர்ச்சி சதவீதமும் பெற்றோா்களின் கவனத்தை ஈா்த்தது . இதனால் இப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தது. இதனையடுத்து பள்ளிக்கு தேவையான உபகரணங்களை ஊா் பொதுமக்களும், முன்னாள் மாணவர்களும்  அன்பளிப்பாக வழங்கி பள்ளியின் வளர்ச்சியில் தங்களையும் ஈடுபடுத்திக்கொண்டனர் .
சிறந்த மாதிரி பள்ளி
இப்படி பலரின் உதவியையும், பாராட்டுகளையும் பெற்ற இப்பள்ளியின் செயல்பாடுகளை கவனித்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இப்பள்ளியை கரூா் மாவட்டத்தில் சிறந்த மாதிாி பள்ளியாக தோ்வு செய்து கூடுதல் வசதிகளை செய்து கொள்ளநிதி உதவி வழங்கியது. மேலும் ஆங்கில வழி கற்றல் வகுப்புகளை, குழந்தைகளுக்கான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளையும் தொடங்கவும் தமிழக அரசு அனுமதி கொடுத்தது. இதனையடுத்து இந்தப்பள்ளி தற்போது நவீன கட்டமைப்பு வசதிகளை பெற்று செயல்பட தொடங்கியது.
இதனால் கடந்த 2013-ம் ஆண்டில் 150 மாணவர்களே பயின்று வந்த இப்பள்ளியில் தொடந்து வந்த ஆண்டுகளில் 250, 400, 580, 650, 720 என மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக கூடி எல்.கே.ஜி.வகுப்பு தொடங்கி பிளஸ்-2 வகுப்பு வரை இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் எண்ணிக்கை 970 ஆகும். தற்போது 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இப்பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 1500-ஐ தொட்டுள்ளது. 
கோரிக்கை
இதில் பல்வேறு பகுதிகளிலுள்ள தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகள் ஆகியவற்றில் இருந்து இடம் பெயர்ந்து வந்து இப்பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை மட்டும் 700 ஆகும். இப்படி ஆர்வமுடன் பல்வேறு பகுதியில் இருந்தும் மாணவர்கள் சேர்ந்து வரும் நிலையில், பள்ளியில் கூடுதலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.