கரூர் அருகே இளம்பெண் மர்ம சாவு; உறவினர்கள் சாலைமறியல்


கரூர் அருகே இளம்பெண் மர்ம சாவு; உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 July 2021 12:33 AM IST (Updated: 30 July 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே இளம்பெண்ணின் மர்ம சாவு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்
குடும்ப தகராறு
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள சேர்வைகாரன் பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராசாத்தி (வயது 24). இவருக்கும், கடவூர் அருகே உள்ள திருமான்பட்டியை சேர்ந்த கணேசன் (30) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 
இந்த தம்பதிக்கு இதுவரை குழந்தைகள் இல்லையாம். இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தினமும் கணேசன்மது குடித்து விட்டு வந்து ராசாத்தியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 
உறவினர்கள் சமரசம்
இந்நிலையில் கடந்த வாரமும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராசாத்தி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு சேர்வைக்காரன்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 
பின்னர் ராசாத்தியின் உறவினர்கள் சமரசம் செய்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு கணேசன் வீட்டில் ராசாத்தியை விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் ராசாத்தி தனது பெற்றோர் வீட்டுக்கு போன் செய்து நான் இங்கு நலமாக இருக்கிறேன் எனக்கூறியுள்ளார். 
சாவில் மர்மம்
இந்தநிலையில் அன்று காலை 9 மணிக்கு ராசாத்தி தூக்குப்போட்டு இறந்து விட்டதாக அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் போன் மூலம் ராசாத்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராசாத்தியின் பெற்றோர் திருமான்பட்டிக்கு வந்துள்ளனர். 
பின்னர் பாலாவிடுதி போலீஸ் நிலையத்திற்கு ராசாத்தியின் பெற்றோர் சென்று தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது கால் தரையில் தொட்டு கொண்டிருப்பதாகவும், உடலில் காயம் இருப்பதால் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தனர். இதையடுத்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து, ராசாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சாலைமறியல்
 இந்நிலையில் நேற்று காலை ராசாத்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கரூர் காந்திகிராமத்தில் உள்ள கரூர்-திருச்சி சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 அப்போது ராசாத்தியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story