செரியலூரில் லஞ்சம் வாங்காத கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கிராமமக்கள்
கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை கேக் வெட்டி கிராமமக்கள் கொண்டாடினர்.
கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராம நிர்வாக அதிகாரியாக அருள்வேந்தன் (வயது 31) கடந்த ஓராண்டுக்கு முன்பு பணியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு கிராம மக்கள் சான்றிதழ்கள் பெற எளிமையாக அணுக முடிந்தது. இணைய வழியில் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தாலும் உடனுக்குடன் சான்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வந்தார். மேலும் எந்த ஒரு சான்றிதழுக்கும் யாரிடமும் லஞ்சம் பெறாமல் அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்ததால் கிராம மக்கள் மனதில் இடம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கிராம நிர்வாக அதிகாரி பிறந்த நாள் என்பதை அறிந்த கிராம இளைஞர்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் வண்ண காகிதங்கள் ஒட்டி அலங்கரித்து செரியலூர் ஜெமின் ஊராட்சி மன்ற தலைவர் அலமுகார்த்திகா நிவாஷ், செரியலூர் இனாம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குமாரவேல் மற்றும் கிராம இளைஞர்கள் பிறந்த நாள் கேக் மற்றும் மரக்கன்றுகளுடன் ஊர்வலமாகச் சென்று அலுவலக வளாகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலரை கேக் வெட்ட வைத்து கொண்டாடினார்கள். மேலும் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
Related Tags :
Next Story