2 மாதங்களாக போலி கொரோனா சான்று தயாரித்து கொடுத்தது அம்பலம்
போலி கொரோனா சான்று தயாரித்து கொடுத்ததாக கைதானவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 2 மாதங்களாக போலியாக கொரோனா சான்று தயாரித்து கொடுத்தது அம்பலம் ஆகி உள்ளது.
தென்காசி:
போலி கொரோனா சான்று தயாரித்து கொடுத்ததாக கைதானவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 2 மாதங்களாக போலியாக கொரோனா சான்று தயாரித்து கொடுத்தது அம்பலம் ஆகி உள்ளது.
தீவிர சோதனை
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் காரணமாக தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பிற மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது.
அத்துடன் கொரோனா இல்லை என்ற சான்றும் கொடுத்தால்தான் பிற மாநிலங்களுக்கு செல்ல முடியும். அந்த வகையில் தமிழக- கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் ஏற்கனவே இயங்கிவரும் வருமானவரித்துறை மற்றும் காவல்துறை சோதனைச்சாவடிகள் தவிர சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போலி சான்று
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வரும் வாகனங்கள் அனைத்தும் இங்கு நிறுத்தப்பட்டு சோதனை நடைபெறுகிறது. அவ்வாறு 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சோதனையில் 4 பேர் போலியான கொரோனா சான்று வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இந்த சான்றுகளை தயார் செய்து விற்பனை செய்த புளியரையை அடுத்த பகவதி புரத்தைச் சேர்ந்த சரவண மகேஷ் (வயது 37) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
திடுக்கிடும் தகவல்கள்
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடு்ம் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.
தான் பிளஸ்-2 படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும், கேரளாவிற்கு செல்ல வருபவர்கள் கொரோனா சான்று இல்லாமல் இருப்பதை அறிந்து போலியாக தயார் செய்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2 மாதங்களாக இவ்வாறு செய்து உள்ளதாகவும், போலி சான்று பெற்று பலர் பயணம் செய்துள்ளனர் என்றும், சரவண மகேஷ் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story