மாவட்ட செய்திகள்

வேலையில்லாத கட்சி, பெகாசஸ் விவகாரத்தில் புரளியை கிளப்புகிறது + "||" + Annamalai charge

வேலையில்லாத கட்சி, பெகாசஸ் விவகாரத்தில் புரளியை கிளப்புகிறது

வேலையில்லாத கட்சி, பெகாசஸ் விவகாரத்தில் புரளியை கிளப்புகிறது
வேலையில்லாத கட்சியான காங்கிரஸ், பெகாசஸ் விவகாரத்தில் புரளியை கிளப்புகிறது என தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
நாகர்கோவில், 
வேலையில்லாத கட்சியான காங்கிரஸ், பெகாசஸ் விவகாரத்தில் புரளியை கிளப்புகிறது என தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
நாகராஜா கோவிலில் அண்ணாமலை
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசி விட்டு வந்திருக்கிறார்கள். எனவே எங்களது கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. எல்லா கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். அதை விட அதிகமான வகையில் பா.ஜனதா கட்சி தயாராக இருக்கிறது.
சசிகலா தலைமையா?
அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை ஏற்றால் பா.ஜனதா அந்த கட்சியுடன் கூட்டணியில் நீடிக்குமா? என்று கேட்கிறீர்கள். இதுதொடர்பாக ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறோம். அ.தி.மு.க. பொதுக்குழுவில் அ.தி.மு.க.வினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தான் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடன் தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், அ.தி.மு.க.வை 5 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் வைத்திருந்தவர்கள்.
எனவே யூகத்துக்கு பதில் சொல்ல முடியாது. நீங்கள் கேட்பது யூகத்தின் அடிப்படையிலான கேள்வியாகும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பதில் எந்த தவறும் கிடையாது. நிச்சயமாக அறிவிக்க வேண்டும். உலகத்துக்கே வழிகாட்டியாக திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி பலமுறை திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். எனவே திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
இன்று பா.ஜனதா போராட்டம்
தமிழகத்தை பொறுத்தவரையில் எதுவாக இருந்தாலும் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக கூறி நாடக அரசியல் செய்து வருகிறார்கள். அதேபோல் தான் மீன்வள மசோதாவிலும் கூறி வருகிறார்கள். 
தமிழக பா.ஜனதா கட்சியின் மீனவர் அணியினர் தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை 30-ந் தேதி (அதாவது இன்று) நடத்த உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. சார்பில் வாக்குறுதிகள் கொடுத்தார்களோ? அதை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற இருக்கிறது. எனவே முதலில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும். பெகாசஸ் பிரச்சினையில் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது போல் எந்தவித விஷயமும் கிடையாது. தொலைபேசி ஒட்டுக் கேட்டுள்ளனர் என்பதற்கு ஏதாவது ஆடியோ, வீடியோ வெளியிடப்பட்டுள்ளதா?. எதுவுமே இல்லை.
வேலையில்லாத கட்சி
காங்கிரஸ் கட்சிக்கு, குறிப்பாக ராகுல் காந்திக்கு எந்த வேலையும் இல்லை என்பதை பெகாசஸ் பிரச்சினையை கையாண்ட விதம் காட்டுகிறது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு பெகாசஸ் சாப்ட்வேர்-ஐ விற்கவே இல்லை என்று சொல்லுகிறார்கள். அப்படி இருக்கும்போது இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக ஏன் புரளியை கிளப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி 23 குழுக்களாக பிரிந்து கிடக்கிறது. அதை அவர்கள் முதலில் சரிப்படுத்தட்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
அவருடன் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் தேவ், பொருளாளர் முத்துராமன், தர்மபுரம் கணேசன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
பின்னர் மறைந்த பா.ஜனதா நிர்வாகி ராஜன் இல்லத்துக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.