மாவட்ட செய்திகள்

குப்பைக்கு வைத்த தீயால் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் + "||" + 6 roof houses burnt to ashes by garbage fire

குப்பைக்கு வைத்த தீயால் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

குப்பைக்கு வைத்த தீயால் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
கும்பகோணத்தில் குப்பைக்கு வைத்த தீயால் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் குப்பைக்கு வைத்த தீயால் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 
குப்பைக்கு தீவைப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியில் கோட்டை சிவன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள ஒரு மூங்கில் கொல்லையில் கிடந்த குப்பைகளுக்கு நேற்று காலை  மர்ம நபர்கள் தீவைத்தனர். 
அப்போது திடீரென பலத்த காற்று வீசியதால் குப்பையில் எரிந்து கொண்டிருந்த தீப்பொறி வேமாக பரவி அதே பகுதியில் வசிக்கும் செந்தில்(வயது 45), செல்வம்(45) ஆகியோரது கூரை வீடுகளின் மீது விழுந்தது. 
6 வீடுகள் எரிந்து சாம்பல்
இதில் 2 வீடுகளிலும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் தீ காற்றில் வேகமாக பரவியதில் அருகில் இருந்த வைக்கோல் போர் மற்றும் தென்னை மரங்களிலும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. 
அதே நேரத்தில் கூரை வீடுகளில் இருந்த இரும்பு ஆணிகள் வெடித்து சிதறியதாலும், காற்றில் தீ பரவியதாலும் அருகருகே இருந்த ஜானகிராமன்(35), அந்தோணிசாமி(42), பாலசுப்ரமணியன்(29) மற்றும் மெயின் ரோட்டில் வசிக்கும் முத்துக்குமார்(35) உள்ளிட்ட 6 பேரின் கூரை வீடுகளிலும் தீப்பிடித்தது. இதில் 6 பேரின் கூரை வீடுகளும் முழுவதுமாக தீயில் எரிந்து சாம்பலானது. 
ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
இந்த தீவிபத்தில் வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள், உணவு தானியங்கள், பணம், நகை, குழந்தைகளின் நோட்டு-புத்தகங்கள், ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தீயில் கருகின. 
மேலும் மெயின் ரோட்டில் வசிக்கும் மகாராஜா(35) என்பவரது வீட்டின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த கீற்றுக்கொட்டகை எரிந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கொட்டகையில் இருந்த வாஷிங் மெஷின், ஏ.சி உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகின. 
தகவலறிந்த கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளை சேர்ந்த 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. 
ஆறுதல்
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அன்பழகன் எம்.எல்.ஏ., நிலவள வங்கி தலைவர் அறிவழகன், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினர்.  இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.