கிருஷ்ணா மேலணை நீர்ப்பாசன திட்டத்திற்கு முன்னுரிமை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கிருஷ்ணா மேலணை நீர்ப்பாசன திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
தார்வார்:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. கனமழையால் உத்தர கன்னடா உள்பட ஏராளமான மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று கர்நாடக புதிய முதல்-மந்திரியான பசவராஜ்பொம்மை உத்தர கன்னடா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பெங்களூருவில் இருந்து சென்றார்.
பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள விமான நிலையத்தை சென்றடைந்த அவர், அங்கிருந்து கார் மூலம் உத்தர கன்னடா மாவட்டத்திற்கு சென்றார். முன்னதாக அவர் உப்பள்ளி விமான நிலையத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மிகவும் பிடித்தமான ஊர் உப்பள்ளி
நான் உப்பள்ளியில் பிறந்து வளர்ந்தவன். உப்பள்ளியில்தான் கல்லூரி படிப்பை படித்தேன். கர்நாடகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர் உப்பள்ளிதான். முதல்-மந்திரியாக நான் உப்பள்ளிக்கு வருவதில் எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறேன். முதல்-மந்திரியாக எனது முதல் சுற்றுப்பயணத்தை உப்பள்ளியில் இருந்து தொடங்குவதில் பெருமை அடைகிறேன். என் மீது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மிகவும் நம்பிக்கை வைத்து எனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கி உள்ளனர். நான் முதல்-மந்திரியாக வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவும் ஆசைப்பட்டார். அவர்களது ஆசிர்வாதத்தால் தான் நான் முதல்-மந்திரியாக உயர்ந்துள்ளேன்.
கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்த பெரிய நகரமாக உப்பள்ளி - தார்வார் இரட்டை மாநகரம் உள்ளது. தார்வார் மாவட்டத்தில் என்னென்ன வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ அனைத்தையும் விரைவில் மேற்கொள்வேன்.
மந்திரிசபையில்...
உப்பள்ளியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் மாவட்ட வளர்ச்சிக்காக போராடி வருகிறார்கள். தார்வார் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. அனைவருக்கும் சமமான முறையில் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நான் பாடுபடுவேன். நான் நாளை(இன்று) டெல்லி செல்கிறேன். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளேன். முதல்-மந்திரியாக நான் டெல்லி சென்று மேலிட தலைவர்களை காண்பது இதுதான் முதல் முறை ஆகும்.
அவர்களை சந்தித்து என்னை முதல்-மந்திரியாக உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்து ஆசிரிவாதம் பெற உள்ளேன். மேலும் மந்திரிசபை குறித்தும் விவாதிக்க இருக்கிறேன். அப்போது மந்திரிசபையில் யாருக்கு இடம் வழங்கலாம் என்று பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
ஜெகதீஷ் ஷெட்டருக்கு...
மந்திரிசபையில் தனக்கு இடம் வேண்டாம் என்று ஜெகதீஷ் ஷெட்டர் பகிரங்கமாக கூறியுள்ளார். அவர் மூத்த தலைவர். அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி நான் நேரடியாக அவரிடம் பேசி முடிவெடுப்பேன். அவர் மீது எனக்கு நல்ல அன்பு உள்ளது. நான் வேறு கட்சியில் இருந்தபோது கூட அவர் என்னை அரவணைத்து வழிநடத்தி உள்ளார். அவர் விருப்பத்தை நேரில் கேட்டுவிட்டு பின்னர் மூத்த தலைவர்களிடம் பேசி அவருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து முடிவெடுப்பேன்.
கிருஷ்ணா மேலணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கில் விசாரணை வேகமாக நடந்து வருகிறது. கிருஷ்ணா மேலணை நீர்ப்பாசன திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசிதழில் வெளியிட்ட பின் அது தொடர்பான பணிகள் விரைவில் தொடங்கப்படும். கிருஷ்ணா மேலணை நீர்ப்பாசன திட்டத்திற்கு தான் தற்போது நான் முன்னுரிமை கொடுத்து வேலை பார்த்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story