ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார்


ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 30 July 2021 2:08 AM IST (Updated: 30 July 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார்

ஓசூர்:
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தண்ணீர் திறந்து வைத்தார்.
தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். 
இதன்மூலம் அணையின் இடது, வலதுபுற கால்வாய்கள் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம் மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் தட்டகானபள்ளி, பூதிநத்தம், பெத்தமுத்தாளி, அட்டூர், கதிரேபள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்ன கொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி, நல்லகானகொத்தபள்ளி மற்றும் மார்தாண்ட பள்ளி ஆகிய 22 கிராமங்களில் உள்ள நிலங்களும் பாசன வசதி பெறும். 
சுழற்சி முறையில்...
அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர்வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு 135 நாட்களுக்கு சுழற்சி முறையில் முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும், அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும் 9 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும். தண்ணீர் திறந்துவிடப்படும் காலங்களில் வலதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 28 கனஅடி மற்றும் இடதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 62 கனஅடி என இரு கால்வாய்களிலும் மொத்தம் வினாடிக்கு 88 கனஅடி வீதம் திறந்து விடப்படும். 
கெலவரப்பள்ளி அணையின் மொத்த நீர்மட்டம் 44.28 அடி ஆகும். அணையின் முழு கொள்ளளவு 481 கனஅடி. அணையில் நேற்று 41 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. விவசாயிகள் இதனை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டு கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஓசூர் உதவி கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா, கெலவரப்பள்ளி அணை ஆயக்கட்டு தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story