பசவசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 4 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு; வடகர்நாடகத்தில் 100 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பசவசாகர் அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 4 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வடகர்நாடகத்தில் 100 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
4 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
மராட்டியம் மற்றும் அதன் எல்லையில் உள்ள வடகர்நாடக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மராட்டியத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன்காரணமாக யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாராயணபுரா கிராமத்தில் உள்ள பசவசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
அந்த அணைக்கு வினாடிக்கு 4¼ லட்சம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக சுராப்புரா தாலுகாவில் உள்ள திந்தனி, நீலகந்தரயநாகடி ஆகிய கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த 2 கிராமங்களில் வசித்தவர்கள் மூட்டை, மூடிச்சுகளுடன் வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
100 கிராமங்களுக்கு எச்சரிக்கை
கிருஷ்ணா ஆற்றின் படுகையில் உள்ள கலபுரகி மாவட்டம் ஜேவர்கி, யாதகிரி மாவட்டம் சகாப்புரா, சுராப்புரா, விஜயாப்புரா மாவட்டம் இண்டி, சிந்தகி, ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா, லிங்கசுகுர் ஆகிய தாலுகாக்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ராய்ச்சூர் அருகே கெப்பூர்-உப்பள்ளி சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கெப்பூர்-உப்பள்ளி சாலையை வெள்ளத்திற்கு மத்தியிலும் ஒரு கார் கடந்து சென்று உள்ளது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது வைரலாகி உள்ளன.
Related Tags :
Next Story