கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நகைக்கடன் வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நகைக்கடன் வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்து உள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
சேலம்,
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் காலதாமதம் இன்றி விரைந்து வழங்குவது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இவற்றுக்கு அரசு கட்டிடம் கட்டுதல், பழுதான கடைகளை புனரமைக்கும் பணிகள் ஆகியவை நிதி ஆதாரத்திற்கு ஏற்றவாறு நடைபெறும். 1,000 ரேஷன்கார்டுகளுக்கு கூடுதலாக இருந்தால் அதனை பிரித்து பகுதி நேர ரேஷன் கடைகள் உருவாக்கப்படும்.
உறுப்பினர் சேர்க்கை
விவசாயிகள் மட்டும் அல்லாமல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயது நிரம்பிய அனைத்து தரப்பினரையும் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 18 வயது நிரம்பிய மாணவர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து கல்வி, தொழில் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிலம் இல்லாதவர்களும் கூட்டுறவு சங்கத்துக்கு வரவேண்டும் என்ற நிலையை உருவாக்க உள்ளோம். 1,500 வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விரைவில் பல்நோக்கு சங்கமாக மாற்றப்படும்.
காலிப்பணியிடங்கள்
ரேஷன் கடைகளில் 3,997 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். அப்படி பணி இடங்கள் நிரப்பப்படும் போது, ஆட்கள் தேர்வு வெளிப்படை தன்மையாக ஒரு பைசா கூட வாங்காமல் இருக்கும்.
கடந்த ஆட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் படி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 வகை மளிகைப்பொருட்கள் இதுவரை 2 கோடியே 11 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதாவது 99 சதவீதம் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
பயிர் கடன்கள்
விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டுகள் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கூட்டுறவுத்துறை பல்நோக்கு பணி மையமாக விரிவுபடுத்தப்படும். பணம் மதிப்பிழப்பு நடந்த போது கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் பயிர் கடன்கள் முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளன. அதாவது சோளம் பயிரிட்டவர்கள், வாழை பயிரிட்டதாக கூறி முறைகேடாக கடன் பெற்று உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரூ.500 கோடி முறைகேடு
ரேஷன் கடைகளில் நடைமுறையில் உள்ள பயோ மெட்ரிக் முறையில் உள்ள பிரச்சினைகள் விரைவில் சரிசெய்யப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நகைக்கடன் வழங்கியதில் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்து உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story