காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் படுகொலை
கொப்பல் அருகே காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கொப்பல்:
காதலுக்கு எதிர்ப்பு
கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா சங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் அனுமேஷ் போவி(வயது 22). இவரும் அதே கிராமத்தில் வசித்து வரும் 20 வயது இளம்பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் இளம்பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் முடிவு செய்து உள்ளனர்.
இதுபற்றி அறிந்த அனுமேஷ் தனது காதலியிடம் வீட்டைவிட்டு வெளியேறி வந்து தன்னை திருமணம் செய்யும்படி கூறியுள்ளார். இதற்கு அனுமேசின் காதலியும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் இளம்பெண்ணுக்கு அவசரம், அவசரமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
குத்திக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய அனுமேசை, ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் கத்தியால் அனுமேசை அந்த கும்பல் குத்தியது. இதில் பலத்த காயம் அடைந்த அனுமேஷ் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கங்காவதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் காதலியை திருமணம் செய்ய முயன்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த அனுமேசை, இளம்பெண்ணின் குடும்பத்தினர் சிலர் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து கங்காவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளம்பெண்ணின் குடும்பத்தினரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story