கன்னட திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் திருடிய கார் டிரைவர் உள்பட 2 பேர் கைது - கள்ளச்சாவி தயாரித்து கைவரிசை காட்டியது அம்பலம்
கன்னட திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் திருடியதாக கார் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளச்சாவியை பயன்படுத்தி வீட்டை திறந்து கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு:
திரைப்பட தயாரிப்பாளர்
கன்னட திரைப்பட தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ் கஷ்யாப். இவர் பெங்களூரு அனுமந்தநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரமேஷ் குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.3 லட்சம் ரொக்கம், 710 கிராம் தங்கநகைகளை திருடி சென்று இருந்தனர். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் ரமேஷ் வீட்டில் வேலை செய்தவர்களையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது ரமேசின் கார் டிரைவராக வேலை செய்த சந்திரசேகர்(வயது 32) என்பவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
அப்போது ரமேசின் வீட்டில் தனது நண்பர் அபிஷேக்(34) என்பவருடன் சேர்ந்து திருடியதை சந்திரசேகர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார்.
ரமேசின் வீட்டில் அதிக நகைகள், பணம் இருப்பது பற்றி அறிந்த சந்திரசேகர் நகைகள், பணத்தை திருட திட்டமிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் தனது நண்பர் அபிஷேக்கிடம் கூறி உள்ளார். அவரும், இதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார். இதனால் 2 பேரும் சேர்ந்து நகை, பணத்தை திருட திட்டம் போட்டு உள்ளனர்.
கள்ளச்சாவியை தயாரித்து....
இந்த நிலையில் ரமேசின் வீட்டின் சாவியை திருடிய சந்திரசேகர் அந்த சாவியை பயன்படுத்தி கள்ளச்சாவியை தயாரித்து உள்ளார். கள்ளச்சாவியின் மூலம் ரமேஷ் வீட்டை திறந்து 2 பேரும் கைவரிசை காட்டியதும் விசாரணையில் அம்பலமானது.
கைதானவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் தங்கநகைகளை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைதான 2 பேர் மீதும் அனுமந்தநகர் போலீசார் வழக்கும் பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story