மறைமலைநகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது


மறைமலைநகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2021 10:40 AM IST (Updated: 30 July 2021 10:40 AM IST)
t-max-icont-min-icon

மறைமலைநகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, சிங்கப்பெருமாள்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மறைமலைநகர் போலீசார் மறைமலைநகர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி நடந்து சென்ற 4 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த ரத்தின சபாபதி (வயது 27), ராகவேந்திரன் (23), கிருஷ்ணமூர்த்தி (25), பிரவீன் (25) என்பதும் இவர்கள் 4 பேரும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலையில் செல்லும் நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story