திருக்கடையூரில், கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பலி - வக்கீல் கால் முறிந்தது


திருக்கடையூரில், கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பலி - வக்கீல் கால் முறிந்தது
x
தினத்தந்தி 30 July 2021 7:37 PM IST (Updated: 30 July 2021 7:37 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூரில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பலியானார். வக்கீல் கால் முறிந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

திருக்கடையூர்,

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 30). வக்கீல். இவருடைய தம்பி சுரேஷ் (29) என்ஜினீயர். இவர்கள் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தங்களது நண்பரை பார்த்துவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டி வந்தார். திருக்கடையூர் அபிஷேககட்டளை மெயின்ரோட்டில் வந்த போது எதிரே வேதாரண்யத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் என்ஜினீயர் சுரேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து இருந்த வக்கீல் பாலசுப்பிரமணியனின் வலது கால் முறிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் பலியான சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதாரண்யத்தை சேர்ந்த கார் டிரைவர் கிஷோர் (30) என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான சுரேசின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

Next Story