பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 6 மாதத்துக்குள் முடிக்கப்படும்- அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 6 மாதத்துக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் நீண்டகாலமாக முடிக்கப்படாமல் உள்ள பாதாள சாக்கடை திட்டம் 6 மாதத்தில் முடிக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பூங்கா மற்றும் நடைபாதை அமைத்தல், பக்கிள் ஓடை இருபுறம் சாலை மற்றும் பூங்கா அமைத்தல், சீரான குடிநீர் வினியோகம் செய்தல், பல்நோக்கு அரங்கம் அமைத்தல், வர்த்தக மையம் அமைத்தல் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தினசரி குடிநீர்
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் சீரிய நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி போடும் பணிகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இன்னும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தினசரி குடிநீர் வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்னும் 1½ ஆண்டு காலத்திற்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வழங்கப்படும்.
பாதாள சாக்கடை திட்டம்
தூத்துக்குடி பாதாள சாக்கடை திட்டம் நீண்ட கால நிலுவையில் உள்ள திட்டமாக உள்ளது. இன்றுவரை முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இந்த பணிகளையும் முழுமையாக முடிக்க அலுவலர்களுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இன்னும் 6 மாத காலத்துக்குள் இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்படும். விரிவுபடுத்தபட்ட பகுதிகளையும் பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைக்க ரூ.100 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு உள்ளது. ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில பணிகள் நிலுவையில் உள்ளது அதற்கான பிரச்சினைகளையும் தீர்த்து அவைகளையும் உடனடியாக தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பெரிய அளவில் ஒரு வர்த்தக மைய அரங்கம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அம்பேத்கர்நகர் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வி.வி.டி மேல்நிலை நீர்தேக்க தொட்டி பூங்கா அருகில் பல்நோக்கு அரங்கம் அமைக்கும் பணிகளையும், அம்பேத்கார் நகர் பகுதியில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ள பகுதியையும், தூத்துக்குடி மீன்வள கல்லூரி அருகில் 25 ஏக்கர் பரப்பளவில் வர்த்தக மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதியையும் அமைச்சர் , கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story