டிப்பர் லாரி- மோட்டார்சைக்கிள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி
தூத்துக்குடி அருகே டிப்பர் லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
எலக்ட்ரீசியன்
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அபிராமி நகரை சேர்ந்தவர் மயில்வாகனன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 36). இவர் பழையகாயலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காடு விலக்கு பகுதியில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
பரிதாப சாவு
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர், எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து நடந்த பகுதியில் சாலையோர தெருவிளக்கு வசதி இல்லாததே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியில் மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்தப்பகுதியில் கனரக வாகனங்களை பார்க்கிங் செய்யும் டிரைவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கவாட்டு மின் விளக்கை எரிய செய்யவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story