முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி:
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எதிரொலியாக கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. 3 மாத இடைவெளிக்கு பிறகு இணையவழியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தபடியும், விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்தபடியும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணை
தேனி அருகே பள்ளப்பட்டியில் மூலவைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அடங்கல் அடிப்படையில் விவசாய நிலங்களுக்கு தேவையான உரங்களை கொள்முதல் செய்து வழங்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பு வந்து 6 ஆண்டுகள் ஆகியும் பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, பேபி அணையை பலப்படுத்தி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story