திருப்பூரில் மோட்டார்சைக்கிள் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூரில் மோட்டார்சைக்கிள் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
அனுப்பர்பாளையம்:
திருப்பூரில் மோட்டார்சைக்கிள் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பட்டதாரி வாலிபர்
நீலகிரி மாவட்டம் உப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51). இவருடைய மகன் பிரதீபன் (21). பி.எஸ்சி மைக்ரோ பயாலஜி முடித்த இவர் கடந்த 1 மாதமாக திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகரை அடுத்த ஏ.வி.பி. லே-அவுட் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கல்லூரியில் படிக்கும் போதே பிரதீபன் அவருடைய தந்தையிடம் புதிய மோட்டார்சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டு வந்துள்ளார். ஆனால் குடும்ப சூழல் காரணமாக தற்போது வரை பிரதீபனுக்கு மோட்டார்சைக்கிள் வாங்கி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று பிரதீபன் நீலகிரியில் உள்ள தந்தையிடம் செல்போனில் பேசி உள்ளார். அப்போது தனக்கு மோட்டார்சைக்கிள் வாங்கி தருமாறு மீண்டும் கேட்டுள்ளார். ஆனால் அவருடைய தந்தை வெங்கடேசன் தற்போது உள்ள சூழ்நிலையில் மோட்டார்சைக்கிள் வாங்க முடியாது என்று மகனிடம் கூறி உள்ளார். இதை தாங்கிக்கொள்ள முடியாத பிரதீபன் உடனடியாக செல்போன் பேச்சை துண்டித்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் பதறிப்போன வெங்கடேசன் மகனுக்கு பலமுறை செல்போனில் அழைத்துள்ளார். அவர் போனை எடுக்காததால் திருப்பூரில் உள்ள தியாகராஜன் என்ற நண்பரிடம், தனது மகன் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்க்குமாறு வெங்கடேசன் கூறி உள்ளார். இதையடுத்து ஏ.வி.பி.லே அவுட்டில் பிரதீபன் தங்கி இருந்த அறைக்கு தியாகராஜன் சென்று பார்த்தபோது, அங்கு பிரதீபன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தியாகராஜன் இதுகுறித்து வெங்கடேசன் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பிரதீபனை மீட்டு, ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பிரதீபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
போலீஸ் விசாரணை
நீலகிரியில் இருந்து திருப்பூர் வந்த வெங்டேசன் மற்றும் குடும்பத்தினர் பிரதீபன் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் தந்தை மோட்டார்சைக்கிள் வாங்கி தர மறுத்ததால் விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story