தொழிலாளர் நலத்துறை சார்பில் 1368 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
தொழிலாளர் நலத்துறை சார்பில் 1,368 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை தேனி கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
தேனி:
தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் மகப்பேறு நிதிஉதவி, திருமண நிதிஉதவி, கண்கண்ணாடிக்கான உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களின் கீழ் 739 கட்டுமான தொழிலாளர்கள், 577 அமைப்புசாரா தொழிலாளர்கள், 52 அமைப்புசாரா டிரைவர்கள் என மொத்தம் 1,368 பேருக்கு ரூ.26 லட்சத்து 85 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
இதில், முதற்கட்டமாக 18 தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் குலசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில், அரசு அலுவலர்கள், வணிகர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story