மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2021 9:40 PM IST (Updated: 30 July 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
 நாகையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திரண்டு வந்து, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். டெல்டா விவசாயிகளை வஞ்சிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
பின்னர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியதாவது:-
காப்பீட்டு இழப்பீடு தொகை
2020-21-ம் ஆண்டுக்கான குறுவை நெல் சாகுபடி செய்திட 4,500 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது இலக்கை தாண்டி 32 ஆயிரத்து 715 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ரசாயன உரங்களை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உழவன் செயலியை நாகை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 613 விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.. 2019-20-ம் ஆண்டு குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கான காப்பீட்டு இழப்பீடு தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கு தவறாக உள்ளதால்  அது சரிசெய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
 கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான குறுவை காப்பீடு இழப்பீடு தொகை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு இன்னும் ஒரு வார காலத்திற்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:-
பாரம்பரிய நெல் சாகுபடி
கிராம விவசாயிகள் சங்க தலைவர் மணியன்:- வேதாரண்யம் பகுதியில் பாரம்பரிய நெல் சாகுபடியான மாப்பிள்ளை சம்பா, காட்டு யானை உள்ளிட்ட நெல் ரகங்களை எந்தவிதமான ரசாயன உரமோ, பூச்சி மருந்தோ இல்லாமல் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே இயற்கை விவசாயத்திற்கு தேவையான ஆலோசனைகளை வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி:- நாகை மாவட்ட விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்து, இந்த ஆண்டுக்கான விவசாய கடனை உடனே வழங்க வேண்டும். அரசு அறிவித்தபடி கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 
வேளாண் விரிவாக்க மையம்
விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் முஜீபுசரிக்:-
வேட்டைக்காரனிருப்பு-காரப்பிடாகை தெற்கு சேத்தி கிராமத்திற்கு இடையே உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். . வேட்டைக்காரனிருப்பு பகுதியில் வேளாண் விரிவாக்க மையம் அமைத்து தர வேண்டும்.
விவசாயிகள் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் சம்பந்தம்:-
தலைஞாயிறு 2-ம் சேத்தி கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் கடந்த 10 ஆண்டுகளாக உப்பு நீர் உட்புகுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே அடப்பாறு அடவலஞ்சான், இரட்டை கரை வலம்புரி வாய்க்கால் மதகு, கெளுத்தி வாய்க்கால் வடிகால் மதகு உள்ளிட்ட பகுதிகளில் குழாய் மற்றும் கரை கட்டுதல் போன்ற பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குழாய் மதகு மற்றும் கரை கட்டுதல் போன்ற பணிகளை  தொடங்க வேண்டும்.
மேகதாது அணை
தமிழக காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர்:-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடக அரசு கைவிட வேண்டும். குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
 இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சண்முகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story