தனியார் பள்ளிகளைப்போன்று அரசு பள்ளிகளை 2 ஆண்டுகளில் மேம்படுத்த நடவடிக்கை


தனியார் பள்ளிகளைப்போன்று அரசு பள்ளிகளை 2 ஆண்டுகளில் மேம்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 30 July 2021 4:31 PM GMT (Updated: 30 July 2021 4:31 PM GMT)

தனியார் பள்ளிகளைப்போன்று அரசு பள்ளிகளை 2 ஆண்டுகளில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

வல்லம்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரி 650 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம், தென்னங்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு கள்ளப்பெரம்பூர் ஏரி நீர் உறுதுணையாக இருந்து வருகிறது.

பல ஆண்டுகளாக இந்த ஏரி தூர்வாரப்படாத நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் பங்களிப்புடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராம மக்கள் நிதி திரட்டி குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரும் பணி நடந்து வந்தது. தற்போது ரூ.1 கோடி யில் முதற்கட்டமாக தூர்வாரப்பட்டு உள்ளது.

ஏரியின் கரைகளை பலப்படுத்தும் விதமாக வெட்டிவேர் பதிக்கும் பணியும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் வகையில் கரைகளின் இருபுறமும் பனை விதைகள் நடும் பணியும் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. மேலும் பறவைகள், விலங்குகள் பயனடையும் வகையில் பலன் தரும் பழம் தரும் மரங்களையும் நடும் பணியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடங்கினர்.

5 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு கிராம இளைஞர்கள், விவசாயிகள் ஒருங்கிணைந்து இப்பணியை ஆரம்பித்து கடந்த ஒரு வார காலமாக நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கள்ளப்பெரம்பூர் ஏரிக்கு நேரில் வந்து இந்த பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து 500 மரங்களை கொண்ட குறுங்காட்டை அவர் திறந்து வைத்தார்.

இந்த ஆய்வின்போது ஏரி சீரமைப்பு குழு தலைவர் குலோத்துங்கன், எக்ஸ்னோரா அமைப்பு தலைவர் செந்தூர் பூரி, சமவெளி பாதுகாப்பு இயக்க தலைவர் பழனிராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு திறப்பது குறித்து ஏற்கனவே துறை ரீதியாக ஆலோசனை செய்யப்பட்டது. கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருந்தாலும், அது எந்த அளவுக்கு இருக்கும் என தெரியவில்லை.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்போது எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு பள்ளி திறப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை அரசுக்கு உள்ளது. தமிழக முதல்வர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரப்பு செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன என்கிற விவரம் தெரியவரும். அதை அடிப்படையாகக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

மேலும் தனியார் பள்ளிகளைப்போல அரசு பள்ளிகளையும் இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகள் கற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story