திண்டிவனம் அருகே கோவிலில் சிலை உடைக்கப்பட்ட சம்பவம்: புதையல் எடுக்க குழி தோண்டியதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு உரிய விசாரணை நடத்த வலியுறுத்தல்
திண்டிவனம் அருகே கோவிலில் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் மன்னர் காலத்து புதையல் எடுக்க குழி தோண்டியதாக கிராம மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரம்மதேசம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தில் சஞ்சீவி மலை அடிவாரத்தில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சோழர் காலத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக சஞ்சீவி மலை மீது உள்ள சிவன் கோவிலில் சோழர்கள் கால கல்வெட்டுகளும் இடம் பெற்றுள்ளது. அதாவது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
சாமி சிலை உடைப்பு
பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் ராமு (வயது 64) என்பவர் அந்த கோவிலுக்கு அறங்காவலர் உறுப்பினராக இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராமு, கோவிலுக்குள் சென்று, அங்கு மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கத்தை உடைத்து, அந்த பகுதியில் குழி தோண்டியுள்ளார்.
இதுபற்றி அறிந்த, அப்பகுதி மக்கள் பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, ராமுவை பிடித்து விசாரித்தனர். அதில், சிவலிங்க சிலையை உடைத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கன்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமுவை கைது செய்தனர்.
கனவில் வந்த அம்மன்
சிலையை உடைத்ததற்கான காரணம் குறித்து ராமுவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், சிவலிங்கத்தை உடைப்பதற்கு முந்தைய நாள் இரவு எனது கனவில் காமாட்சியம்மன் வந்தார்.
நான் சிவலிங்கத்துக்கு அடியில் சிறைபட்டு இருக்கிறேன் என்னை மீட்குமாறு கூறினார். இதன் காரணமாக, சிவலிங்கத்தை உடைத்து குழி தோண்டினேன். ஆனால் அங்கு அம்மன் இல்லை என்று கூறி போலீசாரை அவர் திகைக்க வைத்தார்.
மன்னர்கள் காலத்து ஆபரணங்கள்
ஆனால், இது தொடர்பாக கிராம மக்கள் தரப்பில் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதாவது, சஞ்சீவி மலையில் உள்ள 2 கோவில்களுக்கும் செஞ்சிக்கோட்டை, மரக்காணம் பூமிஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் சுரங்கப்பாதைகள் உள்ளது. இதை மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்கள். எனவே, மன்னர் காலத்து தங்க ஆபரண புதையல் இந்த கோவிலுக்குள் இருப்பதாக நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது.
ஆகவே இந்த புதையலை எடுக்க வேண்டும் என்று ஆசையில், தான் அவர் சிலையை உடைத்து இருக்க வேண்டும். மேலும், தனி ஒரு நபரால் பல டன் எடையுள்ள கற்களை தூக்கி அப்புறப்புத்துவது என்பது சாத்தியம் இல்லாதது.
எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, இந்த பிரச்சினையில் உள்ள மர்ம மூடிச்சுகளை போலீசார் அவிழ்க்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story