திண்டிவனத்தில் பரபரப்பு நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது


திண்டிவனத்தில் பரபரப்பு நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
x
தினத்தந்தி 30 July 2021 10:06 PM IST (Updated: 30 July 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஊழியரை தாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் பாலமுருகன்(வயது 34). இவரை தி.மு.க. கிளை செயலாளரும், 26-வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான டி.ஜி.பாஸ்கர் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு தெரிந்த ஒருவருடைய வீட்டு வரி கட்டண ரசீதை உடனடியாக இன்று போட்டு தர வேண்டும் என்று கூறி உள்ளார். 

அதற்கு பாலமுருகன், பதில் அளித்துவிட்டு அலுவலக அலுவல் காரணமாக டி.ஜி.பாஸ்கரிடம் இருந்து அதன்பின் வந்த தொலைபேசி அழைப்பை பாலமுருகன் தவிர்த்துள்ளார்.


ஊழியர் மீது தாக்குதல்

 இதனால் ஆத்திரமடைந்த டி.ஜி.பாஸ்கர் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு,  பாலமுருகனை சக ஊழியர்கள் முன்னிலையில் அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

அதற்கு பாலமுருகன், நான் தான் உங்களுக்கு உரிய பதில் அளித்துவிட்டேன். அப்புறம் எதற்காக என்னை தொடர்ந்து தொல்லை செய்கிறீர்கள் என்று கேட்டார்.  மீண்டும் அவரை டி.ஜி. பாஸ்கர் திட்டியதுடன்,    திடீரென பாலமுருகனை அவர் தாக்கினார். இதை பார்த்த சக ஊழியர்கள்  அதிர்ச்சிக்கு       உள்ளானார்கள். 

மேலும் பால    முருகனை  அவர் தாக்க முயன்ற போது, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரையும் தடுத்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

வீடியோ வெளியானது 

அதன்பிறகு, திண்டிவனம் போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். இதனிடையே தி.மு.க. நிர்வாகிகளுடன் வந்த டி.ஜி.பாஸ்கரன், பாலமுருகனை சந்தித்து நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். 

இதையடுத்து பாலமுருகன் போலீசில் அளித்த தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.   இதற்கிடையே, இந்த சம்பவம் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. 

இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியர் ஒருவரை தி.மு.க. நிர்வாகி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story