பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வருவதால் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் டி.மோகன் உத்தரவு
பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வருவதால் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்கள் தற்போது கொரோனா தொற்று பற்றி அச்சமில்லாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் பணியை மாவட்டம் முழுவதும் அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அளவில் கர்ப்பிணி பெண்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் விழுப்புரம் மாவட்டம் 100 சதவீதம் பூர்த்தி அடைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளுக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இனி வரும்காலம் விழாக்காலம் என்பதால் கொரோனா தொற்று பரவலை முற்றிலும் தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வார காலம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாளை (1-ந் தேதி) முதல் 7-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து நடத்தி பொதுமக்கள் நன்கு அறிந்துகொள்ளும் வகையில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கலெக்டர் டி.மோகன், நிருபர்களிடம் கூறுகையில், நமது மாவட்டத்தில் 17 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இதுநாள் வரை 4 லட்சத்து 35 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் இலக்கானது படிப்படியாக முழுமையாக எய்தப்படும். ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்படும் நாளில் அங்கேயே தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.
அதுபோல் பெட்ரோல் நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story