பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 30 July 2021 10:44 PM IST (Updated: 30 July 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்.

ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  இதேபோல் மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்.
காரில் கடத்தல்
சூளகிரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.28 ஆயிரத்து 800 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. 
இதுதொடர்பாக வேலூர் மாவட்டம் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த சபீர் (வயது 40), கலீம் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 2 பேர் கைது
சூளகிரி போலீசார் அந்த பகுதியில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற சூளகிரி பஜார் தெரு ஸ்ரீகண்டகுப்தா (70) என்பவரை கைது செய்தனர். கடையில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  அதே போல அதே பகுதியில் உள்ள மற்றொரு மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் விற்றதாக பஜார் தெருவை சேர்ந்த முனிராஜ் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story