கோத்தகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கோத்தகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2021 10:44 PM IST (Updated: 30 July 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அக்கால் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தபிரபு(வயது 34). கட்டுமான தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் ஆனந்தபிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதை சித்ரா கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வேலை முடிந்து ஆனந்தபிரபு குடிபோதையில் வீடு திரும்பினார். அப்போது அவரை சித்ரா கண்டித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் விரக்தி அடைந்த ஆனந்தபிரபு தற்கொலை செய்து கொள்வதாக கூறி படுக்கை அறைக்கு சென்று உள்பக்கமாக தாழிட்டு கொண்டார். ஆனால் அவர் நாடகம் ஆடுவதாக சித்ரா நினைத்தார். அதன்பின்னர் நீண்ட நேரம் ஆகியும் ஆனந்தபிரபு அறையை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சித்ரா, கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உடனே கோத்தகிரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஆனந்தபிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story