போலி ஆவணம் மூலம் ரூ.17¾ லட்சம் மோசடி


போலி ஆவணம் மூலம் ரூ.17¾ லட்சம் மோசடி
x

நில இழப்பீடு தொகை பெற போலி ஆவணம் மூலம் ரூ.17¾ லட்சம் மோசடி செய்த வழக்கில் கோவில் ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்,

தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்கோஷ்டியூர் வழியாக செல்கிறது. இதற்காக 2015-ல் இப்பகுதியில் அரசு நில எடுப்பு செய்தனர். அதில் சுள்ளங்குடி குரூப் பட்டா எண் 640-ல் சர்வே எண் 72-1, 72-7-ல் 48 சென்ட் அளவில் நிலம் கையகப்படுத்தினர். அதற்கான இழப்பீடாக  17 லட்சத்து 84 ஆயிரத்து 218 ரூபாயை 2016-ல் நில உரிமையாளர்களுக்கென ஒதுக்கினர். இதற்கான பணத்தை சுள்ளங்குடியைச் சேர்ந்த திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் காவலராக பணிபுரியும் பழனியப்பன் பெற்றுள்ளார். இதற்காக அவர் போலி ஆவணங்களைத் தயாரித்து அரசை ஏமாற்றியது தற்போது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து சென்னையில் வசிக்கும் காளிதாஸ் மகன் ரமேஷ் என்பவர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் அளித்த புகாரின் பேரில் நெடுஞ்சாலைக்கென எடுக்கப்பட்ட இடம் ரமேஷின் தாய்வழிப்பாட்டனார் நாராயணசாமி பெயரில் இருந்துள்ளது. நாராயணசாமி வீட்டிற்கு அனுப்பிய தபாலில் அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகன் பழனியப்பன் போலி ஆவணங்களைத் தயாரித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் இழப்பீடு பெற்று மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பிய தகவலின் பேரில் பழனியப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாகியுள்ள கோவில் காவலாளி பழனியப்பனை திருக்கோஷ்டியூர் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story