ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
வரதட்சணை கேட்டு மனைவியை அடித்துக்கொன்ற ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து திருவாரூர் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருவாரூர்;
வரதட்சணை கேட்டு மனைவியை அடித்துக்கொன்ற ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து திருவாரூர் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வரதட்சணை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள காக்காகோட்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 51). இவருடைய மனைவி இந்திரா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த ஜெயபால் சொந்த ஊர் திரும்பி கங்களாஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். ஜெயபால் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம் வாங்கி வருமாறு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
அடித்துக்கொலை
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி இந்திராவிடம் பணம் கேட்டு தகராறு செய்த ஜெயபால், இரும்பு கம்பியால் தனது மனைவி இந்திராவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த இந்திரா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரா உயிரிழந்தார். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கொலை குற்றத்துக்காக ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story