போலீஸ் போல் நடித்து பெட்டிக்கடை உரிமையாளர் வீட்டில் பணம் திருட்டு


போலீஸ் போல் நடித்து பெட்டிக்கடை உரிமையாளர் வீட்டில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 31 July 2021 12:05 AM IST (Updated: 31 July 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

களக்காட்டில் போலீஸ் போல் நடித்து பெட்டிக்கடை உரிமையாளர் வீட்டில் பணத்தை திருடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

களக்காடு:
களக்காட்டில் போலீஸ் போல் நடித்து பெட்டிக்கடை உரிமையாளர் வீட்டில் பணத்தை திருடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெட்டிக்கடை உரிமையாளர்

நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவருடைய மனைவி நாகூர்மீராள் (வயது 53). இவர் வீட்டுடன் சேர்த்து பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து விட்டு வெளியில் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட பெண் ஒருவர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று அங்கு ஒரு டப்பாவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை திருடினார்.

போலீஸ் போல் நடிப்பு

பின்னர் அந்த பெண் அங்கிருந்து புறப்பட்டபோது, நாகூர்மீராள் திடீரென வந்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் சுதாரித்து கொண்டு நான் போலீஸ் என்று நாகூர் மீராளிடம் கூறி உள்ளார். பின்னர் அவர் நாகூர் மீராளிடம், நீங்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது.

எனவே, வீட்டை சோதனை போட வந்தேன் என்றும் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து நைசாக நழுவி வீட்டுக்கு முன் வந்தார். அங்கு  நிறுத்தியிருந்த ஸ்கூட்டரில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

விசாரணை

பின்னர் வீட்டுக்குள் சென்று நாகூர்மீராள் பார்த்தார். அப்போது அங்குள்ள டப்பாவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பெண் போலீஸ் எனக்கூறி சோதனையிட வந்த பெண் தான் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அந்த பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story