நெல்லை நீர்வளத்தை மீட்டெடுத்து பாதுகாக்க புதிய இணையதளம்-அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


நெல்லை நீர்வளத்தை மீட்டெடுத்து பாதுகாக்க புதிய இணையதளம்-அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
x
தினத்தந்தி 31 July 2021 12:09 AM IST (Updated: 31 July 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையின் நீர்வளத்தை மீட்டெடுத்து பாதுகாக்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளதாக, நெல்லையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

நெல்லை:
நெல்லையின் நீர்வளத்தை மீட்டெடுத்து பாதுகாக்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளதாக, நெல்லையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊமத்துரை சிறை மீட்பு அரங்கத்தையும், அங்கு ரூ.29¼ லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி திரையரங்கத்தையும், தொடுதிரை மெய்நிகர் சுற்றுப்பயணம் என்ற தலைப்பில் அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளக்கூடிய தொடுதிரை மேற்பலகையையும் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலையில் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் நீர்வளத்தை காப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நெல்லை வேய்ந்தான்குளத்தை அழகுபடுத்துவது, பல்வேறு நீர்நிலைகளை புனரமைப்பது, பாபநாசம் முதல் நெல்லை மாவட்டத்தில் எல்கை வரையிலான தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருகரைகளிலும் தன்னார்வலர்கள், வனத்துறையினர் உதவியுடன் மரக்கன்று நடுதல், தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள கல்மண்டபங்கள் சீரமைக்கும் பணி ஆகியவற்றை தொடங்கி வைத்துள்ளேன்.

புதிய இணையதளம்

நெல்லையின் நீர்வளத்தை மீட்டெடுத்து பாதுகாக்க அரசு நிறுவனங்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு செயல்பட ‘நெல்லை நீர்வளம்’ என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து பணியாற்ற மாவட்ட நிர்வாகம் புதிய இணையதளம் தொடங்கி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,237 நீர்நிலைகளுக்கும் புத்துயிர் அளிப்பதற்காக இதன் வரைபடம் தயாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திறந்தவெளி திரையரங்கம்

நெல்லையில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் யூனிட்டை தொடங்கி வைத்துள்ளேன். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் திறந்தவெளி திரையரங்கம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பு உள்ளது.

நெல்லை அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அருங்காட்சியகங்கள், சிற்பங்களை காணொலி மூலம் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3-வது அலை

கொரோனா 3-வது அலை வந்தால் அதை சமாளிக்க அரசு மருத்துவ கல்லூரியில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அதை எதிர்கொள்ள தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

குழந்தைகளுக்காக 200 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளன. இதில் அவசர சிகிச்சைக்காக 20 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தமிழகத்தில் தான் தடுப்பூசி அதிகமாக போடப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் மணிமூர்த்தீஸ்வரத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கண்டியபேரி முதியோர் பராமரிப்பு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் விஷ்ணு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story