கர்நாடக மந்திரிசபை வருகிற 5-ந்தேதி விரிவாக்கம்? - குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு வாய்ப்பு இல்லை
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மந்திரிசபை வருகிற 5-ந்தேதி விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதில், குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.
பெங்களூரு:
மந்திரி சபை விரிவாக்கம்
டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பா.ஜனதா மேலிட தலைவர்களான பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். முதல்கட்டமாக 20 பேருக்கு மந்திரி பதவி வழங்க பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஆர்.அசோக், உமேஷ்கட்டி, சசிகலா ஜோலே மற்றும் எம்.எல்.சி.க்கள் சி.பி.யோகேஷ்வர், லட்சுமண் சவதி, இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
5-ந் தேதி பதவி ஏற்பு விழா
முதல்கட்ட மந்திரிசபை விரிவாக்கம் வருகிற 5-ந் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதில் ஆர்.அசோக், ஸ்ரீராமுலு, கோவிந்த் கார்ஜோள் ஆகிய 3 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர். அத்துடன பைரதி பசவராஜ், எஸ்.டி.சோமசேகர், அஸ்வத் நாராயண், சுதாகர், பூர்ணிமா, ரேணுகாச்சார்யா, முருகேஷ் நிரானி உள்ளிட்டோர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆர்.அசோக் துணை முதல்-மந்திரி பதவியுடன், பெங்களூரு நகர வளர்ச்சித்துறையை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். தலைநகர் பெங்களூருவில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அதனால் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா இந்த துறையை தன்வசமே வைத்திருந்தார். அத்துறைக்கு பலர் போட்டி போட்டும், அதை எடியூரப்பா இறுதி வரை விட்டுக் கொடுக்கவில்லை.
அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ.
எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.வுக்கும் மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருந்த அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ.வுக்கும் மந்திரி பதவி கிடைப்பது உறுதி என்று கூறப்படுகிறது.
கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடக்க இன்னும் 22 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த சூழ்நிலையில் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து மந்திரிகளை நியமனம் செய்ய பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. அரசு நிர்வாகத்துடன் கட்சியை பலப்படுத்தும் திறன் உள்ளவர்களுக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்க அக்கட்சி ஆலோசித்து வருகிறது.
குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு...
மேலும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி, ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மும்பை நண்பர்களான மந்திரிகளாக இருந்த சுதாகர், பி.சி.பட்டீல், பைரதி பசவராஜ், சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் கோர்ட்டுக்கு சென்று, தங்களது தொடர்பான ஆபாச வீடியோக்களை வெளியிட தடை ஆணை பெற்றனர்.
இந்த நிலையில் அவ்வாறு தடை ஆணை பெற்றவர்கள், ஊழல் கறை படிந்தவர்கள், களங்கம் இருப்பவர்களுக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று பா.ஜனதா மேலிடத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்களுக்கு மட்டுமே மந்திரிசபையில் இடம் வழங்குமாறு அந்த அமைப்பின் நிர்வாகிகள் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story