அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 31 July 2021 2:23 AM IST (Updated: 31 July 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர்:

ஆடி 2-ம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்நிலையில் ஆடி மாத 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது.
பயபக்தியுடன் தரிசனம்
இதில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களில் சிலர் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி கோவிலில் முடி காணிக்கை செலுத்தினர். பெண் பக்தர்கள் உரலில் மாவு இடித்து, அதில் மாவிளக்கு தயார் செய்து தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த எண்ணெய், நெய் ஆகியவற்றை கோவில் வளாகத்தில் இருந்த வாடா விளக்கில் ஊற்றி அம்மனை வழிபட்டனர். இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலம் புது காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் மதியம் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Next Story