மேகதாது திட்டத்துக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் - மேலிட தலைவர்களிடம் பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
டெல்லியில் மேலிட தலைவர்களை கர்நாடக புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் மேகதாது திட்டத்துக்கு விரைவாக அனுமதி வழங்க மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தினார்.
பெங்களூரு:
மந்திரி சபை
கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த 28-ந் தேதி பதவி ஏற்றார். அன்று அவர் ஒருவர் மட்டுமே பதவி ஏற்றார். மந்திரிசபை ஒரு வாரத்திற்கு பிறகு விரிவாக்கம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
துணை முதல்-மந்திரிகளாக கோவிந்த் கார்ஜோள், ஆர்.அசோக், ஸ்ரீராமுலு ஆகியோர் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். கர்நாடகத்தில் ஒருபுறம் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்னொருபுறம் வட காநாடகம் மற்றும் கடலோர கர்நாடக மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு அதிகளவில் பாதிப்புகள் உண்டாகியுள்ளன.
டெல்லி பயணம்
இந்த நேரத்தில் மந்திரிசபை விரிவாக்கத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக பசவராஜ் பொம்மை நேற்று காலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
அங்கு அவர் பிரதமர் மோடி உள்பட மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதாவது, ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து பேசினார்.
நன்றி தெரிவித்தார்
அதன்பிறகு மாலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதிய முதல்-மந்திரிக்கு மோடி உள்பட அனைத்து தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு தன்னை முதல்-மந்திரியாக நியமனம் செய்ததற்கு பசவராஜ் பொம்மை நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுடன் பசவராஜ் பொம்மை கர்நாடக பவனில் ஆலோசனை நடத்தினார். இதில் நிலுவையில் உள்ள கர்நாடக திட்டங்களுக்கு ஒப்புதல் பெற உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் கர்நாடக நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் எழுப்புமாறும் அவர் கூறினார்.
ஜல்சக்தி துறை மந்திரி
இதற்கிடையே டெல்லியில் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மூத்த எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது மேகதாது திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு பசவராஜ் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
பேட்டி
இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து பேசினேன். அத்துடன் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுடனும் ஆலோசனை நடத்தினேன். பிரதமர் உள்பட அனைத்து தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
தூய்மையான ஆட்சி
பிரதமரிடம் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவரமாக எடுத்துக் கூறினேன். கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக ஒதுக்குமாறு கேட்டேன். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் கூறினார். தூய்மையான, ஊழலற்ற நல்லாட்சியை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். ஆட்சி நிர்வாகத்தை சுறுசுறுப்பாக நடத்த வேண்டும் என்று கூறினார். நான் 24 மணி நேரமும் பணியாற்ற தயாராக இருப்பதாக உறுதி அளித்தேன்.
சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்த வேண்டும் என்று தலைவர்கள் கூறினர். அதிலும் நான் கவனம் செலுத்துவேன். நல்லாட்சி நிர்வாகத்துடன் கட்சியை பலப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர். அதையும் செய்வதாக உறுதியளித்தேன். மத்திய அரசிடம் கர்நாடக அரசின் திட்ட வரைவுகளுக்கு விரைவாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பேன். இதற்காக கர்நாடகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களையும் உள்ளடக்கி ஒரு குழுவை அமைப்பேன். அந்த குழுவுடன் சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து கர்நாடக அரசின் திட்டங்களுக்கு அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேகதாது திட்டம்
ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்திடம், மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரி கடிதம் வழங்கினேன். இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை அரசு ஏற்கனவே மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கை காவிரி நிர்வாக வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி விரைவாக அனுமதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தேன்.
அத்துடன் கிருஷ்ணா மேலணை திட்டத்தில் நடுவர் மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிடுமாறு கோரினேன். மேலும் பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தேன். கலசா-பண்டூரி திட்டத்திலும், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு கேட்டேன். மத்திய-மாநில அரசுகள் இடையே ஒருங்கிணைப்புடன் செயல்பட அதிகாரிகள் மட்டத்தில் ஒரு குழு அமைக்க முடிவு செய்துள்ளேன். இந்த குழு மத்திய அரசின் திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா பாதிப்பு
மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்குவதாக மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர். அதனால் அடுத்த ஒரு சில நாளில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும். நான் பெங்களூரு திரும்பியதும், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள பெங்களூரு நகர், சிக்கமகளுரு, மைசூரு, சாம்ராஜ்நகர், தட்சிண கன்னடா, உடுப்பி உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளேன்.
அந்த மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க சில உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளேன். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக குழந்தைகளுக்கான ஐ.சி.யு. பிரிவு அமைக்கப்படும். மாநிலத்தில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story