தற்கொலை செய்து கொண்ட ஆதரவாளரின் குடும்பத்தினருக்கு எடியூரப்பா நேரில் ஆறுதல்


தற்கொலை செய்து கொண்ட ஆதரவாளரின் குடும்பத்தினருக்கு எடியூரப்பா நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 31 July 2021 2:36 AM IST (Updated: 31 July 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பா, முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த செய்தியை கேட்டதும் அவரது ஆதரவாளர் தற்கொலை செய்து கொண்டார். நேற்று அவரது வீட்டுக்கு எடியூரப்பா நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.

சாம்ராஜ்நகர்:

எடியூரப்பா

  கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா. இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்ததால் மனமுடைந்த அவரது தீவிர ஆதரவாளரான சாம்ராஜ்நகர் மாவட்ட குண்டலுபேட்டை தாலுகா பொம்மலாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுபற்றி அறிந்த எடியூரப்பா மனவேதனை அடைந்தார். உடனடியாக அவர் செல்போன் மூலம் ரவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று எடியூரப்பா பெங்களூருவில் இருந்து சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வந்தார்.

ரூ.5 லட்சம் நிவாரண நிதி

  பின்னர் அவர் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பொம்மலாபுரா கிராமத்தில் உள்ள ரவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.

  இதுதவிர தான் இன்னும் ரூ.5 லட்சம் நிதி தருவதாகவும், அதை வைத்து வீட்டை நல்ல முறையில் கட்டிக் கொள்ளும்படியும் அவர்களிம் தெரிவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ரவியின் குடும்பத்தினர் எடியூரப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவர்களை எடியூரப்பா தேற்றினார். பின்னர் அவர் அங்கிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:-

வீடு கட்டிக்கொள்ள...

  நான் ராஜினாமா செய்து கொண்டதை தாங்க முடியாமல் மனவேதனையில் ரவி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டது எனக்கு கவலையாக உள்ளது. என் மனது வலிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளேன். இன்னும் ரூ.5 லட்சம் தருவதாகவும், அதை வைத்து வீட்டை நல்லபடியாக கட்டிக் கொள்ளவும் கூறியிருக்கிறேன். ரவிக்கு ஒரு தாயும், 2 சகோதரிகளும் உள்ளனர். அவரது குடும்பத்தினரை பார்த்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு.

  மந்திரிசபை விரிவாக்கத்தில் பசவராஜ் பொம்மைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நான் தலையிட மாட்டேன். நான் கட்சியை பலப்படுத்தும் பணியை முழுமையாக செய்ய இருக்கிறேன். பசவராஜ் பொம்மை தற்போது டெல்லி சென்றுள்ளார். அங்கு இன்னும் சில நாட்கள் இருந்து மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு செய்வார். மந்திரிகளை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பசவராஜ் பொம்மைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் நான் அவருக்கு எந்த ஆலோசனையையும் கொடுக்க மாட்டேன்.

17 பேருக்கும் மந்திரி பதவி...

  நல்ல படியாக பணியாற்றும்படி மட்டும் அவருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறேன். மும்பை நண்பர்களான 17 பேருக்கும் மந்திரிசபையில் இடம் வழங்குவது குறித்து பசவராஜ் பொம்மையே முடிவு எடுப்பார். அதுபற்றி அவர் மேலிட தலைவர்களிடம் ஆலோசனை நடத்துவார். மந்திரிசபையில் இடம்பிடிக்க பலரும் போட்டி போட்டு வருகிறார்கள். மந்திரிசபை விரிவாக்கத்திற்கு சற்று காலதாமதம் ஆகலாம். 

நான் கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்துவேன். அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை 130 முதல் 135 தொகுதிகளில் வெற்றிபெற வைப்பதே என் இலக்கு. பா.ஜனதாவை மீண்டும் நான் ஆட்சியில் அமர வைப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட மேலிட தலைவர்களிடம் உறுதி அளித்திருக்கிறேன். விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு பிறகு நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  தற்கொலை செய்து கொண்ட ரவி ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். எடியூரப்பா கடந்த 26-ந் தேதி அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதுதொடர்பான செய்திகளை டி.வி. பார்த்த ரவி மனமுடைந்து ஓட்டலில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story