3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது
3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது செய்யப்பட்டார்.
கரூர்
முதல் திருமணம்
கரூர் வெங்கமேடு வி.வி.ஜி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பாலசுப்பிரமணிக்கும்(வயது 36), கோவை மாவட்டம் பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியை சேர்ந்த சதாசிவம் மகள் ஜோதி முருகேஸ்வரிக்கும்(30) கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் கணவர் மற்றும் கணவரின் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக ஜோதி முருகேஸ்வரி வசித்து வந்தார். இந்தநிலையில், பிரசவத்திற்காக ஜோதி முருகேஸ்வரி தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. 3 மாதங்களுக்கு பிறகு குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு ஜோதி முருகேஸ்வரி திரும்பினார்.
வேறு பெண்களுடன் பழக்கம்
3 மாதங்கள் கழித்து ஜோதி முருகேஸ்வரி கரூர் வந்தபோது கணவர் பாலசுப்பிரமணிக்கு நித்யா(26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கேட்டபோது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் முறையாக பதில் அளிக்காமல் அவரை துன்புறுத்தியதால் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
அதன்பிறகு நித்யாவை, பாலசுப்பிரமணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் கடந்த 2017-ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
கல்யாண மன்னன் கைது
மேலும், இந்த 2 திருமணங்களையும் மறைத்து அவர்களுக்கு தெரியாமல் சுதா(25) என்ற பெண்ணை ஏமாற்றி கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சுப்பிரமணி 3-வது திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து அறிந்த ஜோதி முருகேஸ்வரி, தன்னை ஏமாற்றியதுடன் மேலும் 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பாலசுப்பிரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 2-வது மனைவி நித்யாவுடன் வசித்த பாலசுப்பிரமணி மற்றும் நித்யா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த காதல் மன்னன் பாலசுப்பிரமணி கைது செய்யப்பட்ட விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story