சொத்து தகராறில் அண்ணியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை; திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சொத்து தகராறில் அண்ணியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருச்சி,
சொத்து தகராறில் அண்ணியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அண்ணிக்கு அரிவாள் வெட்டு
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா தெற்கு பாகனூரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய தம்பி ராஜேந்திரன் (வயது 42). இவர்களுக்குள் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி காலை வீட்டின் வாசலில் பாத்திரம் தேய்த்துக் கொண்டு இருந்த செல்வத்தின் மனைவியான தனது அண்ணி முத்துலட்சுமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.
கைது
இதில் முத்துலட்சுமி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில் ராம்ஜிநகர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசுதரப்பு வக்கீல் அருள்செல்வி வாதாடினார். சாட்சிகள் விசாரணை முடிந்து, நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பு கூறினார்.
7 ஆண்டு சிறை
அதில், குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு கொலை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளுக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், பெண்ணை துன்புறுத்திய வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இருந்தார்.
மேலும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதனால் ராஜேந்திரனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story