வையம்பட்டி அருகே கல்லூரி மாணவரின் செல்போனை திருடிய அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது


வையம்பட்டி அருகே கல்லூரி மாணவரின் செல்போனை திருடிய அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 July 2021 7:39 AM IST (Updated: 31 July 2021 7:39 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே கல்லூரி மாணவரின் செல்போனை திருடிய அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வையம்பட்டி,

வையம்பட்டியை அடுத்த எம்.துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பூவரசன். தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு செல்போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது செல்போனை காணவில்லை. அந்த செல்போனில் ஜி.பி.எஸ். மற்றும் மொபைல் ட்ராக்கர் உள்ளிட்ட வசதிகளை அவர் ஏற்படுத்தி வைத்திருந்துள்ளார்.  

இதனால் நண்பரின் செல்போன் எண் மூலம் அவரின் செல்போனை ட்ராக் செய்து பார்த்த போது அதே பகுதியில் உள்ள குளத்தின் அருகே இருப்பது தெரியவந்தது. உடனே கிராம மக்கள் பலரும் ஒன்று சேர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற போது 3 பேர் பொதுமக்களை பார்த்ததும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். இருப்பினும் அவர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்த போது அவர்களிடம் தான் கல்லூரி மாணவனின் செல்போன் இருந்தது.

உடனே சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் துலுக்கம்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பாரதி என்ற ராஜா(வயது 28), அவரது தம்பி தினேஷ்குமார்(23), வெங்கடேஷ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story