ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 31 July 2021 7:52 AM IST (Updated: 31 July 2021 7:52 AM IST)
t-max-icont-min-icon

ஆடி 2 -வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


திருச்சி,
ஆடி 2 -வது வெள்ளிக்கிழமையையொட்டி, திருச்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடி 2-வது வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில், பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். 

அதையொட்டி, நேற்று திருவானைக்காவல், சமயபுரம், உறையூர், தென்னூர் உள்பட திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வெக்காளியம்மன் கோவில்

ஆடி 2-வது வெள்ளியில் அங்காள பரமேஸ்வரி, காளி, துர்க்கை அம்மனை பெண்கள் பெரிதும் வழிபட்டனர். திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு இருந்தது.  திரளான பெண்கள் அதிகாலையிலேயே கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை வழிபட்டனர். வெக்காளியம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இதுபோல திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள குங்குமவல்லி உடனுறை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. குங்குமவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தார். இதுபோல அங்குள்ள தில்லைகாளியம்மனையும் பக்தர்கள் வழிபட்டனர்.

அகிலாண்டேஸ்வரி அம்மன்

நேற்று ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை என்பதால் திருவானைக்காவல் கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்மன் வெட்டிவேர் அங்கி பாவாடை அணிந்து மலர்கீரிடம் சூடி, காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

ஆடிவெள்ளியையொட்டி திருவானைக்காவல் கோவிலில் அதிகாலை 3 மணியளவிலேயே நடை திறக்கப்பட்டு அதன் பின்னர் சிறு, சிறு பூஜைகால இடைவெளிக்கு பின்னர் தொடர்ந்து நள்ளிரவு வரை சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. அம்பாள் காலையில் லெட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தந்தார். 

அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாரை தரிசனம்செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தொட்டியம்

இதுபோல திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. கோவிலில் பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

இதுபோல் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் நேற்று ஆடி 2-வது வெள்ளிகிழமையையொட்டி காவிரியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு மதுைரகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவ அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதுபோல் முசிறியில் உள்ள அழகுநாச்சி அம்மன், மகாமாரியம்மன், தேவிகருமாரியம்மன், பாலத்து மாரியம்மன், சின்ன சமயபுரத்தாள், அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் ஆடிமாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விளக்கு ஏற்றிவழிபட்டனர். இதேபோன்று தா.பேட்டை பகுதியில் உள்ள பெரியமாரியம்மன், செல்லாண்டி அம்மன், மகாமாரியம்மன், ராஜகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

Next Story