பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய திட்டம்


பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய திட்டம்
x
தினத்தந்தி 31 July 2021 6:49 PM IST (Updated: 31 July 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் ‘தோழி' எனும் புதிய திட்டத்தை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்:

புதிய திட்டம் அறிமுகம்

பெண்கள், சிறுமிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்காக தமிழகம் முழுவதும் பெண்கள் உதவி மையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மகளிர் போலீசார் இடம்பெற்றுள்ளனர். 

பெண்கள், சிறுமிகள் இந்த மையம் மூலம் பெண் போலீசாரை உதவிக்கு அழைக்க 181 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்களுக்காக ‘தோழி’ என்ற புதிய திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த திட்டம் திண்டுக்கல், வத்தலக்குண்டு, பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், நத்தம், செம்பட்டி என மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. 

இதில் திண்டுக்கல்லில், ஆயுதப்படை மைதான கூட்ட அரங்கில் ‘தோழி’ திட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

24 ஸ்கூட்டர்கள்

இதற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா முன்னிலை வகித்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா அனைவரையும் வரவேற்றார். 

இதையடுத்து ‘தோழி’ திட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 24 பெண் போலீசாருக்கு, 24 ஸ்கூட்டர்களை டி.ஐ.ஜி. வழங்கி நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

அதன் பின்னர் வழக்கு விவரங்களை பதிவு செய்வதற்காக அவர்களுக்கு 24 மடிக்கணினிகள், கையேடுகள் வழங்கப்பட்டன.

தோழிகளாக இருக்க வேண்டும்

நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி பேசுகையில், பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களை பாதுகாத்து நம்பிக்கை அளிப்பதற்காகவே பெண்கள் உதவி மையத்தின் மற்றொரு திட்டமாக ‘தோழி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, இளவயது திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஏற்படுகிறது. 

அந்த பிரச்சினைகளில் சிக்குபவர்களை பாதுகாப்பதுடன் நின்றுவிடாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோழிகளாக பெண் போலீசார் இருந்து அவர்களிடம் எதிர்காலம் குறித்த பயத்தை போக்க வேண்டும். நமக்காக போலீசார் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றார்.

தொடர் கண்காணிப்பு

அதன் பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா பேசுகையில், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பெண் போலீசாரின் செயல்பாடு இருக்க வேண்டும்.

 இளவயது திருமணங்களை தடுத்து நிறுத்துவதுடன் தங்களின் பணி முடிந்துவிட்டது என்று பெண் போலீசார் நினைக்க கூடாது. 

பாதிக்கப்பட்ட சிறுமியை யாரேனும் துன்புறுத்துகின்றனரா? திருமண வயதை எட்டுவதற்குள் மீண்டும் அந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடு நடக்கிறதா? என்று தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

நிகழ்ச்சியில் தோழி திட்டத்தில் இணைக்கப்பட்ட மகளிர் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
---------


Next Story