தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். அப்போது அவர், அனைத்து நோயாளிகளுக்கும் படுக்கை வசதியை உறுதிப்படுத்த அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகம் ரூ.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர், இந்த பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், அனைத்துத்துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து காட்சிப்படுத்துதல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர், அங்குள்ள குப்பைக்கிடங்கை பார்வையிட்டு குப்பைகளை முறைப்படி பிரித்து மேலாண்மை செய்வது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார். அப்போது அவர், குப்பைகள் கொட்டும் இடத்தில் தடுப்புகள் ஏற்படுத்தி குப்பைகள் பறக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 29-வது வார்டில் உள் நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதையும், 27-வது வார்டில் புதிதாக 50 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் அனைத்து நோயாளிகளுக்கும் படுக்கை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ்சில் பயணம் செய்யும் பொதுமக்கள், டிரைவர்கள், கண்டக்டர்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கி முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்து கூறினார். மேலும் அவர், புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்களிடம் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்து முக கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருட்களை வழங்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த், பயிற்சி கலெக்டர் கவுசிக், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம், மாநகராட்சி தலைமை பொறியாளர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story