புதிய வழித்தடத்தில் பஸ் வசதி; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் சாதாரண கட்டண புதிய வழித்தட நகர பேருந்தை, கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சாதாரண கட்டண புதிய வழித்தட நகர பேருந்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
புதிய பஸ் வசதி
தூத்துக்குடி தற்காலிக பஸ்நிலையத்தில் நேற்று சாதாரண கட்டண புதிய வழித்தட நகர பேருந்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். சமூக நலன்- மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வழித்தட நகர பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அந்த நகர பேருந்தில் மில்லர்புரம் வரை பயணம் செய்தார்.
அவருடன் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ. மற்றும் கட்சி பிரமுகர்களும் பயணம் செய்தனர். பேருந்தில் கனிமொழி எம்.பி.க்கு, மகளிர் இலவசமாக பயணம் செய்ய வழங்கப்படும் இலவச பயண சீட்டை கண்டக்டர் வழங்கினார்.
வழித்தடங்கள்
இந்த புதிய பஸ் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 4-வது கேட், அரசு ஆஸ்பத்திரி, பழைய பஸ் நிலையம், தந்தி ஆபீஸ், திரேஸ்புரம், முருகன் தியேட்டர் வழியாக தாளமுத்துநகர் (சிலுவைபட்டி) சென்றடையும். பின்னர் தாளமுத்துநகரில் இருந்து முருகன் தியேட்டர், திரேஸ்புரம், மட்டக்கடை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தாலுகா ஆபீஸ், அரசு மருத்துவமனை, 3-வது மைல் வழியாக கலெக்டர் அலுவலகம் சென்றடையும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு மில்லர்புரம், அரசு ஆஸ்பத்திரி, பழைய பஸ் நிலையம், உதவி கலெக்டர் அலுவலகம், பீச் ரோடு, கேம்ப்- 1, துறைமுக குடியிருப்பு, கேம்ப்- 2, முத்தையாபுரம் பல்க், ஸ்பிக்நகர் வழியாக முள்ளக்காடு சென்றடையும்.
இலவசமாக பயணம் செய்யலாம்
இந்த நகர பேருந்துகளை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்களுக்கு தனி துறையை அமைத்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளார். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி நகர பகுதியில் இயங்கி வந்த பல்வேறு பஸ்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய வழித்தட நகர பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். எனவே இந்த பஸ்களை பெண்கள் அதிக அளவில் பயன்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அங்கன்வாடி மையம்
அதை தொடர்ந்து தூத்துக்குடி மில்லர்புரம் டி.எம்.பி. காலனி பகுதியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
அதன் பின்னர் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் மாநகராட்சியின் மூலம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு மரக்கன்றை நட்டுவைத்து திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, சண்முகையா எம்.எல்.ஏ., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாண்மை இயக்குனர் ராஜேஸ்வரன், பொது மேலாளர் சரவணன், துணை பொது மேலாளர் சசிகுமார், தூத்துக்குடி கிளை மேலாளர் பாஸ்கரன், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, உதவி செயற்பொறியாளர் சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு சந்தீப் நகரில் பசுமை வீடு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.1.80 லட்சத்தில் வீடுகள் வழங்கும் விழா நடந்தது. கனிமொழி எம்பி கலந்து கொண்டு, வீடுகளை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளின் சாவிகளை வழங்கினார்.
பின்னர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை, கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story