நஷ்டத்தில் செயல்படும் சங்கங்களை லாபத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்- நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் அறிவுறுத்தல்


நஷ்டத்தில் செயல்படும் சங்கங்களை லாபத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்- நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 31 July 2021 10:47 PM IST (Updated: 31 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

நஷ்டத்தில் செயல்படும் சங்கங்களை லாபத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் செல்வராஜ் அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி:
நஷ்டத்தில் செயல்படும் சங்கங்களை லாபத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் செல்வராஜ் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நபார்டு வங்கி முதன்மை பொதுமேலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மேலாண்மை இயக்குனர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் செல்வராஜ் பேசியதாவது:-
வங்கியின் அனைத்து விதமான கடன்களிலும் குறியீட்டினை எய்தும் பொருட்டு குறியீடு நிர்ணயம் செய்து, குறியீட்டினை எய்துவதற்கு புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். லாபத்தில் செயல்படும் வங்கிகளுக்கான சொந்த கட்டிடங்களை மேலும் அதிகரிக்க வேண்டும். கிளை கட்டிடங்கள் வாடகையில் செயல்பட்டு வருவதாலும் அவற்றையும் நவீனமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏ.டி.எம். எந்திரங்களில் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

குறைந்த வட்டியில் கடன்

மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை சங்கங்களாக மாற்றுவதற்கு முதல்கட்டமாக லாபத்தில் செயல்படும் சங்கங்களை தேர்வு செய்து அதிக அளவிலான சங்கங்களை இத்திட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இத்திட்டத்தின் மூலம் அப்பகுதிக்கு தேவையான தொழில்கள் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு மிகக்குறைந்த வட்டியில் நபார்டு வங்கி நிதியுதவி வழங்கி வருகிறது. எனவே கூட்டுறவு சங்கங்கள் இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடனுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து நஷ்டத்தில் செயல்படும் சங்கங்களை லாபத்தில் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அல்லது செயல்பட முடியாத சங்கங்களை அருகாமையிலுள்ள சங்கங்களுடன் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story