நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 31 July 2021 10:50 PM IST (Updated: 31 July 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தற்போது ஊரடங்கில் தளர்வு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தவிர பிற மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் இ-பதிவு அல்லது இ-பாஸ் பெற வேண்டியது இல்லை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருந்தாலும், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் விடுதிகளில் தங்கி ஓய்வெடுத்து விட்டு திரும்பி செல்கின்றனர். மேலும் மூடப்பட்டு உள்ள சுற்றுலா தலங்கள் முன்பு நின்று கொண்டு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். 

அதிகளவில் வரும் சுற்றுலா பயணிகளால் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்ட எல்லையில் உள்ள குஞ்சப்பனை உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவர்கள் மாவட்டத்துக்குள் அரசு பஸ், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி முன்னாள் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை மேற்கொண்டு வருவதுடன், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- சோதனைச்சாவடிகளில் அரசு பஸ், இருசக்கர வாகனங்களில் வருவோருக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு பெரும்பாலும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை. எனவே ஏராளமானோர் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வருகின்றனர். இவ்வாறு அவசியமின்றி வருபவர்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story