தென்னை மரங்களை வேரோடு சாய்த்த காட்டுயானை


தென்னை மரங்களை வேரோடு சாய்த்த காட்டுயானை
x
தினத்தந்தி 31 July 2021 10:51 PM IST (Updated: 31 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தென்னை மரங்களை வேரோடு சாய்த்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. அதனை பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டுயானைகள் புகுந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. தற்போது கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டுயானை ஒன்று முகாமிட்டு, அட்டகாசம் செய்து  வருகிறது. அங்குள்ள ஏச்சம்வயல் பகுதியில் நேற்று முன்தினம் மீண்டும் காட்டுயானை நுழைந்தது. 

தொடர்ந்து உஷா, குஞ்சப்பா, வர்கீஸ் உள்ளிட்ட விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. மேலும் குலைகளுடன் கூடிய வாழைகளை தின்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழைகள், 14 தென்னை மரங்கள் நாசமானது. விடிய விடிய அட்டகாசம் செய்துவிட்டு நேற்று அதிகாலையில் வனப்பகுதிக்கு திரும்பியது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் அட்டகாசம் செய்த விநாயகன் என்ற காட்டுயானையை வனத்துறையினர் பிடித்து முதுமலையில் விட்டனர். ஊருக்குள் வந்து பழகிய அந்த யானை, ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. 

முன்னதாக அந்த யானையை முதுமலையில் விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்தும், வனத்துறையினர் தன்னிச்சையாக மேற்கொண்ட முடிவால், மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோன்று தேவர்சோலையில் ஏற்கனவே முகமது என்பவரது கடையை காட்டுயானை உடைத்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் காட்டுயானை கடையை சேதப்படுத்தி, அங்கு வைத்திருந்த உணவு பொருட்களை தின்றது. இதனால் முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் பீதி அடைந்து உள்ளனர்.

Next Story