பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது எப்படி


பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது எப்படி
x
தினத்தந்தி 31 July 2021 10:57 PM IST (Updated: 31 July 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்து சப்-கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்து சப்-கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி பகுதி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு  போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கினார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகைவேல் வரவேற்றார்.

கூட்டத்தில் சப்-கலெக்டர் பேசியதாவது:-

பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தவிர்க்கவும் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் எங்கு போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகம் நடக்கிறது என்று முதலில் கண்டறிய வேண்டும். பின்னர் அங்கு விபத்துகளை தடுக்க என்ன வசதிகள் செய்ய வேண்டும் என்று அரசிடம் கேட்கலாம்.

போக்குவரத்து நெரிசல்

பொள்ளாச்சியில் முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் பேசுகையில், பொள்ளாச்சியில் மஞ்சநாயக்கனூர் பிரிவு, பொள்ளாச்சி-உடுமலை ரோடு, பொள்ளாச்சி-ஆழியாறு ரோடு, பாலாறு ஆஞ்சநேயர் கோவில் அருகில், வளர்ந்தாய மரம், குள்ளிசெட்டிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. 

இதனை தடுக்க உரிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். ஒளி பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும் என்றார்.

கருத்துகள்

இதனை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தடுப்பது குறித்தும் பலர் தங்கள் கருத்துக்களை சப்-கலெக்டரிடம் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார்கள் அரசகுமார், விஜயகுமார், சசிரேகா, வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன்,  டிராபிக் வார்டன் அமைப்பு கமலக்கண்ணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story