தம்பதியிடம் நகை மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது


தம்பதியிடம் நகை மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 31 July 2021 5:47 PM GMT (Updated: 31 July 2021 5:47 PM GMT)

கோவில்பட்டியில் தம்பதியிடம் நகை மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
கோவில்பட்டியில் பரிகார பூஜை நடத்துவதாக கூறி தம்பதியிடம் தங்க நகைகளை மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நகை மோசடி

கோவில்பட்டி அருகே உள்ள நாரைக்கிணறு என்.புதூரை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (வயது 45). அவருடைய மனைவி உலகாண்ட ஈஸ்வரி (40). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதை அறிந்த கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்த முத்துராமலிங்கம் (44) என்பவர் இவர்களிடம், தான் ஒரு ஜோசியர் என்று கூறி அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் இவர்களிடம் பரிகார பூஜை செய்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறி கடந்த ஏப்ரல் 14-ந் தேதி அவர்களிடம் இருந்து 6½ பவுன் தங்க நகைகளை வாங்கி பரிகாரபூஜை செய்துள்ளார். பின்னர் அந்த தங்க நகைகளை திருப்பி கொடுக்கவில்லை.
இதுகுறித்து உலகாண்ட ஈஸ்வரி, நாரைக்கிணறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் முத்துராமலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். 

குண்டர் சட்டத்தில் கைது

விசாரணையில், முத்துராமலிங்கம் இதே போன்று பலரை ஏமாற்றி நகைகளை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே முத்துராமலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோருக்கு நாரைக்கிணறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தர்மர் பரிந்துரைத்தார்.
அதன்பேரில் முத்துராமலிங்கத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் நாரைக்கிணறு போலீசார் முத்துராமலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Next Story