தங்கம் என நினைத்து மொபட்டில் சென்ற பெண்ணை தாக்கி கவரிங் சங்கிலி பறிப்பு
குளித்தலை அருகே தங்கம் என நினைத்து மொபட்டில் சென்ற பெண்ணை தாக்கி கவரிங் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குளித்தலை
கவரிங் சங்கிலி பறிப்பு
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி செல்லப்பிரியா (வயது 28). இவர் நேற்று முன்தினம் தனது மகள் நித்ராவை (7) அழைத்துக்கொண்டு தோகைமலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் தனது ஊருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். குளித்தலை அருகே உள்ள தேசியமங்கலம் பகுதியில் குளித்தலை- மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
அந்த இருவரும் செல்லப்பிரியாவின் கன்னத்தில் அடித்து அவரை மொபட்டில் இருந்து கீழே தள்ளி உள்ளனர். பின்னர் செல்லப்பிரியா அணிந்திருந்த கவரிங் சங்கிலியை தங்கம் என நினைத்து பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இந்த சம்பவத்தில் மொபட்டில் இருந்து கீழே விழுந்த செல்லப்பிரியா மற்றும் அவரது மகள் நித்ரா ஆகியோர் காயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தோகைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பிரியாவை தாக்கி கவரிங் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story