ஞாயிற்றுக்கிழமை மாலை வரை திறக்க நடவடிக்கை
விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை திறக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை திறக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நினைவு இல்லம்
பெருந்தலைவர் காமராஜர் கடந்த 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்் தேதி மறைந்தார். அதன் பின்னர் விருதுநகரில் அவர் பிறந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு எடுத்தது. கடந்த 1984-ம் ஆண்டு முதல் காமராஜர் பிறந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. முதலில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தில் இருந்தது. பின்னர் செய்தித்துறை நிர்வாகத்தில் இருந்து வருகிறது. காமராஜர் நினைவு இல்லத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளூர் முதல் உலகத்தலைவர்களுடன் அவர் சந்தித்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
உருவச்சிலை
மேலும் நினைவு இல்லத்தின் மையத்தில் அவரது உருவச்சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. காமராஜர் நினைவு இல்லத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் வந்து நினைவு இல்லத்தை பார்த்து அதிசயிக்கும் நிலை தொடர்கிறது.
பொதுவில் பள்ளி மாணவ-மாணவிகளும், அரசு அலுவலர்களும், வணிக மற்றும் தொழில்நிறுவனங்களில் பணிபுரிவோரும் பொது விடுமுறைநாட்களிலும், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும்தான் காமராஜர் நினைவு இல்லத்துக்கு வந்து பார்த்து செல்ல விரும்புவர். ஆனால் காமராஜர் இல்லம் வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் நிலைஉள்ளது.
ஏமாற்றம்
இதனால் அன்றைய தினம் வெளியூர்களிலிருந்து வருவோர் மதியத்திற்கு மேல் காமராஜர் நினைவு இல்லத்தை பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை தொடர்கிறது.
வழக்கமாக இம்மாதிரியான நினைவு இல்லங்கள் விடுமுறை நாட்களில் தான் கூடுதல் நேரம் திறந்திருக்க வேண்டும். அப்போது தான் விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையில் வருவோர் நினைவு இல்லத்தை பார்த்து செல்ல வாய்ப்பு ஏற்படும். எனவே விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காமராஜர் நினைவு இல்லம் முழுமையாக திறந்திருக்க வேண்டியது அத்தியாவசிய தேவையாகும்.
எனவே மாவட்ட செய்தித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் காமராஜர்நினைவு இல்லம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story