சோமரசம்பேட்டை அருகே பரிதாபம் தகராறை விலக்கிவிட்ட விவசாயி வெட்டிக்கொலை


சோமரசம்பேட்டை அருகே பரிதாபம் தகராறை விலக்கிவிட்ட விவசாயி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 1 Aug 2021 1:05 AM IST (Updated: 1 Aug 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

சோமரசம்பேட்டை அருகே தகராறை விலக்கிவிட்ட விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சோமரசம்பேட்டை, 
சோமரசம்பேட்டை அருகே தகராறை விலக்கிவிட்ட விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நண்பர்கள்

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள ஏகிரி மங்கலத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 37). பக்கத்து ஊரான கே.சாத்தனூரை சேர்ந்தவர் தர்மராஜ் (27). நண்பர்களான இருவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் இளையராஜாவின் மனைவியிடம் தர்மராஜ் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதையறிந்த இளையராஜா கடந்த 29-ந்தேதி தனது நண்பரிடம், ‘என் மனைவியிடம் எப்படி பேசலாம்?’ என்று தட்டி கேட்டுள்ளார். 

அரிவாள் வெட்டு

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே தர்மராஜ் கே.சாத்தனூரில் உள்ள தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்தார். அங்கு வந்த தர்மராஜின் நண்பர்கள் சுந்தரம், அன்பு, பாக்கியராஜ் மற்றும் சிலர் சேர்ந்து இளையராஜாவை தாக்கியுள்ளனர்.

இதைப்பார்த்த இளையராஜாவின் வீட்டின் அருகில் வசிக்கும் விவசாயி முகிலரசன் (32) ஓடி வந்து தகராறை விலக்கிவிட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அரிவாளால் முகிலரசனை சரமாரியாக வெட்டினர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் படுகாயம் அடைந்த இளையராஜாவையும், முகிலரசனையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முகிலரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இளையராஜா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார், முகிலரசனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, முகிலரசனை வெட்டி கொலை செய்த கும்பலை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட முகிலரசனுக்கு திருமணம் ஆகி ரேகா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளனர். 

Next Story