தனியார் அருவிகளில் உதவி கலெக்டர் திடீர் ஆய்வு


தனியார் அருவிகளில் உதவி கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Aug 2021 1:06 AM IST (Updated: 1 Aug 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே தனியார் அருவிகளில் உதவி கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கோட்டை:
செங்கோட்டை அருகே தனியார் அருவிகளில் உதவி கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உதவி கலெக்டர் ஆய்வு

செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழி அருகில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மேக்கரை கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் அரசு விதிமுறைகளை மீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அவற்றின் உரிமையாளர்கள் அனுமதித்து வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவின்பேரில் உதவி கலெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், செங்கோட்டை தாசில்தார் ரோசன்பேகம், மண்டல துணை தாசில்தார் சுடலைமணி, வருவாய் ஆய்வாளர் ராஜா உள்ளிட்டோர் மேக்கரைக்கு சென்று தனியார் அருவிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தனியார் அருவிகளில் குளித்து கொண்டு இருந்த சமூக இடைவெளியை பின்பற்றாத சுற்றுலா பயணிகளுக்கும், கொேரானா தடுப்பு விதிமுறையை மீறி அருவிகளில் குளிக்க அனுமதித்த அருவி உரிமையாளர்களுக்கும் ரூ.16 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தனியார் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும், மீறினால் கொரோனா விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

சோதனை சாவடி

தொடர்ந்து புளியரை கொரோனா தடுப்பு மருத்துவ சோதனை சாவடியில் உதவி கலெக்டர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சோதனை சாவடியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்களிடம் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு அதில் இருக்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்னர் தான் போக அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இதையடுத்து போலீசார்களிடம் கேரளாவில் இருந்து வரும் லாரியையும் நிறுத்தி அதில் இருக்கும் நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்பு லாரிகளை போவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  


Next Story